பாகிஸ்தானின் பாலா கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு முழு காரணம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காகத் தான் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது இந்திய விமானப் படை . பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி பாலாகோட்டில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுநாள் பாகிஸ்தான் விமானப் படை இந்திய எல்லைக்குள் ஊடுருவ எல்லையில் போர்ப் பதற்றம் சூழ்ந்தது.
இந்திய விமானப்படை பாலா கோட்டில் நடத்திய தாக்குதல் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி நடத்திய மற்றொரு அவதாரம் என்று பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இரு நாடுகளிடையே தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கி விட்டார் பிரதமர் மோடி. இதற்கு மத்தியில் உயர் பதவியில் உள்ள அதிகாரியை வைத்து பாஜக தாக்குதல் நாடகம் நடத்திவிட்டது. இதையெல்லாம் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதால் தான் இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டும் என இப்போது கூறுகின்றன என்றார் பரூக் அப்துல்லா .
காஷ்மீரில் மக்களவைத் தேர்தல் நடத்த முடியும்போது சட்டப்பேரவைத் தேர்தலை அறிவிக்காததற்கும் பரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படாமல் பாஜகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றும் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.