மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், குஜராத்தில் இன்று நடக்கிறது. முதல்முறையாக இதில் பிரியங்காவும் பங்கேற்கிறார்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக தொடங்கிவிட்டன. அவ்வகையில், தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு (காரியக்கமிட்டி) கூட்டம், குஜராத் தலைநகர் காந்திநகரில் இன்று நடக்கிறது.
கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங், உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். கட்சி பொறுப்புக்கு வந்த பின் முதன்முறையாக பிரியங்காவும் இதில் கலந்து கொள்கிறார்.
இன்றைய கூட்டத்தில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வியூகம், கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரசாரம் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் இணைந்து பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதிலும் பிரியங்கா பேசுகிறார். தீவிர அரசியலில் குதித்த பிறகு, பிரியங்கா உரையாற்றும் முதல் கூட்டம் இதுவாகும்.
காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் மிக்க காரியக்கமிட்டி கூட்டம், கடைசியாக 1961ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்தது. அதன்பின், 58 ஆண்டுகளுக்கு பிறகு, மோடி, அமீத்ஷா ஆகியோரின் சொந்த மாநிலத்தில் இக்கூட்டம் நடைபெறுவதால், மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.