பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : அவசரமாக ஸ்டேட்மென்ட் கொடுக்கச் செய்த சக்தி எது சார் ...? - கோவை எஸ்.பி.க்கு திமுக முன்னாள் மேயர் கேள்வி

Pollachi sexual assault, Dmk ex mayor questions police CBE SP

by Nagaraj, Mar 12, 2019, 09:52 AM IST

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு 100 சதவீதம் தொடர்பில்லை என்று அவசர அவசரமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தது ஏன்? கொடுக்கச் செய்த சக்தி எது என கோவை எஸ்.பி.க்கு சென்னை நகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஒரு கும்பலால் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்பப் பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் கொடூரம் செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து தமிழகமே பரபரத்து கிடக்கிறது.

தங்கள் வலையில் வீழ்ந்த பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் கொடுமைகளில் ஈடுபட்ட கும்பலுக்கும் ஆளும் கட்சி முக்கியப் புள்ளிகளுக்கும் தொடர்பு என செய்திகள் வெளியாகி வருகின்றன.

பொள்ளாச்சி மாணவிகளை பாலியல் கொடுமை செய்யப்பட்ட காட்சிகளுடன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அவசரமாக பேட்டி கொடுத்த கோவை மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார்.

பாலியல் கொடுமையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவருக்கு பாலியல் குற்றச்சாட்டில் தொடர்பில்லை. பாலியல் புகார் கொடுத்த மாணவி ஒருவரின் சகோதரரை மிரட்டியதாக மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்.பி.பாண்டியராஜன் விளக்கம் கொடுத்தார்.

மேலும் பாலியல் விவகாரத்தில் அரசியல் பிரமுகர்கள் யாருக்கும் தொடர்பில்லை என்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எஸ்.பி பாண்டியராஜன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எஸ்.பி.யின் எச்சரிக்கை குறித்து சென்னை மாநகர முன்னாள் மேயரும் திமுக எம்.எல்.ஏவுமான மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். வழக்கை தீர விசாரிக்காமலே அரசியல் வாரிசுகளுக்கு 100% தொடர்பில்லை என அவசர, அவசரமாக ஸ்டேட்மெண்ட் கொடுக்கச் செய்த சக்தி எது சார் ? என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

You'r reading பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : அவசரமாக ஸ்டேட்மென்ட் கொடுக்கச் செய்த சக்தி எது சார் ...? - கோவை எஸ்.பி.க்கு திமுக முன்னாள் மேயர் கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை