கூவாகம் திருவிழா சமயத்தில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க முடியாது. வேறு தேதியில் நடத்த வேண்டும் என மதுரை கலெக்டரிடம் திருநங்கைகள் சார்பில் மனு கொடுத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே மதுரையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு முதல் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், தேர்தல் நாளன்று தேரோட்டம், அன்று மாலையில் கள்ளழகர் எதிர் சேவை, மறுநாள் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் என சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுவதால் வாக்களிப்பது சிரமம் என்று கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் எங்களுக்கும் கூவாகத்தில் ஏப்ரல் 15 முதல் 17 வரை கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது.நாடு முழுவதும் இருந்து 6.5 லட்சம் பேர் கூட உள்ளோம். திருவிழா முடிந்து மறுநாளே ஊர் திரும்பி வாக்களிப்பது சிரமம். இது திரு நங்கைகள் தேர்தலில் பங்களிக்க விடாமல் செய்வது போல் ஆகிவிடும் என்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று திருநங்கைகள் சார்பில் மதுரை கலெக்டரிடம் பாரதி கண்ணம்மா என்பவர் மனு கொடுத்துள்ளார்.
திருநங்கைகள் நலனுக்காக பாடுபட்டு வரும் சமூக செயற்பாட்டாளரான பாரதி கண்ணம்மா கடந்த 2014 பொதுத் தேர்தலில் மதுரை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.