அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கட்சியை பாஜகவிடம் அடகுவைத்து விட்டாய்ங்க.. என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்சை ஏகத்துக்கும் ஒருமையில் விமர்சித்து தள்ளினார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் 1991-ல் ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரானபோது பொதுப்பணித் துறை அமைச்சராக வலம் வந்தவர் ராஜ கண்ணப்பன். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தான் சார்ந்த யாதவ சமுதாயத்தினரை ஒன்று திரட்டி மக்கள் தமிழ் தேசம் கட்சியை தொடங்கினார். மீண்டும் அதிமுகவில் இணைந்த ராஜ கண்ணப்பன் கடந்த 2009-ல் சிவகங்கையில் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது இன்றளவுக்கும் சர்ச்சையாக உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓ.பி.எஸ் பின்னால் அணிவகுத்தார் ராஜ கண்ணப்பன் தற்போது மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சீட் கேட்டிருந்தார். தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட அதிருப்தியில் அதிமுகவிலிருந்து இன்று விலகினார்.
தமது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற ராஜகண்ணப்பன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ கண்ணப்பன் அதிமுக தலைவர்களை ஏகத்துக்கும் ஒருமையில் வெளுத்து வாங்கினார்.
அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்து விட்டார்கள். அதிமுகவில் தலைமைக்கு லாயக்கு இல்லாதவர்கள் தான் உள்ளனர்.ஓபிஎஸ், இபிஎஸ்சும் ஆளுமை இல்லாதவர்கள். நோட்டாவைவிட ஓட்டு வாங்கும் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி அதிமுகவையே அடகு வைத்து அடிமையாகி விட்டார்கள்.
தென் மாவட்டங்களில் மட்டும் பாஜகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்கி அதிமுகவையே கேவலப்படுத்தி விட்டார்கள் என்றும் கூறியபடியே ஓ.பி.எஸ், இ.பி.எஸ், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரை ஏகத்துக்கும் ஒருமையில் போட்டுத் தாக்கினார்.
தானும் போட்டியிட சீட் கேட்டதாகவும், ஆனால் ஓபிஎஸ் மகனுக்கு சீட் கொடுக்கும் போது எங்க அண்ணனுக்கு கொடு, என் மகனுக்கு கொடு என்று தலைவர்கள் முன்னிலையிலேயே மந்திரிகளும், எம்எல்ஏக்களும் சேர்களைத் தூக்கி அடிக்கும் அளவுக்கு அதிமுக தலைமை கேவலமாகிப் போய்விட்டது என்று ராஜகண்ணப்பன் விமர்சித்தார்.
மக்கள் தமிழ் தேசம் தொண்டர்களையும், அதிமுகவினரையும் திரட்டி இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.