கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் பூசல் வெடித்துள்ளது. நேற்று வந்த காமெடி நடிகை கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவது அவமானமாக உள்ளது என்று கூறி அக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.
நேச்சுரல் பியூட்டி பார்லர் நிறுவனத்தின் தலைவராக உள்ள சி.கே.குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் கடலூர், நாகை மாவட்டங்களின் பொறுப்பாளராகவும் உள்ளார். சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் கமல் 2 நாள் சுற்றுப்பயணம் செய்த போது அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து கமலிடம் பாராட்டு பெற்றவர் குமரவேல்.
வருகின்ற மக்களவைத் தேர்தலிலும் கடலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறி அதற்காக முன்னேற்பாடுகளில் தீவிரமாக இருந்த குமரவேல் இன்று திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகியது குறித்து குமரவேல், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கமல் சாரின் நம்பகத்தன்மையை வைத்துத்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தேன். மாற்று அரசியலை கமல் முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் பயணித்தேன். ஆனால் இங்கும் வழக்கமான அரசியல் தான் நடக்கிறது. சிலரின் தவறான வழி நடத்தலால் கட்சி திசைமாறிச் செல்கிறது. யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதும் கமல் சாருக்கு புரியவில்லை.
கட்சிக்கு நேற்று வந்த கோவை சரளாவை வைத்து நேர்காணல் நடத்துகிறார்கள். அவரும் எவ்வளவு செலவழிப்பீர்கள் என்று தான் கேட்டாரேயொழிய அறிவுப் பூர்வமாக எதுவும் கேட்கத் தெரியவில்லை.
இதை என் மனைவியிடம் கூறியதற்கு கோவை சரளா உங்களை இன்டர்வியூ நடத்தினாரா? என்று காமெடி செய்கிறார். கடலூரில் நீங்கள் தான் வேட்பாளர் என்று முன் கூட்டியே கட்சியில் கூறியதாலேயே களப்பணியில் இறங்கினேன். இப்போது வேட்பாளர் அறிவிப்புக்கு முன் நீங்களே வேட்பாளராக அறிவித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டனர். நானும் மன்னிப்புக் கேட்டேன். ஆனாலும் தொடர்ந்து கட்சியில் நீடிக்க விரும்பாமல் ராஜினாமா செய்து விட்டேன் என்று குமரவேல் தெரிவித்தார்.
இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்னரே குமரவேல் சமூக வலைதளங்களில் தன்னை வேட்பாளராக பதிவிட்டது கட்டுப்பாட்டை மீறும் செயல் என்பதால் அதனை ஏற்க முடியாது. இதற்காக அவர் கொடுத்த விளக்கும் போதுமானதாக இல்லை .இந்நிலையில்அவரே ராஜினாமா செய்துள்ளார். அதனை கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.