திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருந்த 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் திருப்பரங்குன்றம் வழக்கில் அத்தொகுதியில் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஒட்டப்பிடாரத்திலும் வழக்கு தொடர்ந்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் திடீரென மரணமடைந்ததால் அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு முடிந்ததால் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதியே தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இது குறித்த இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தற்போது தடையேதும் இல்லை. தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டால் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.