தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுத் தாக்கலின் போது தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள புள்ளி விபரங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக நம்மை தலை சுற்ற வைக்கிறது.
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் சொத்துவிபரங்களை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் அமமுக சார்பிலும், காங்கிரஸ் தரப்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
தேனி தொகுதிக்கான தேர்தல் அலுவலரிடம் ரவீந்தரநாத் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தனது முழு சொத்து விபரங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கையிருப்பில் 82,714 ரூபாய் ரொக்கம், தனது மனைவி கையிருப்பில் 62,450 ரூபாய் ரொக்கம், வங்கியில் மொத்தம் ரூ.40,13,177 இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது மகன் ஜெய்தீப் பெயரில் வங்கியில் 1,63,131 ரூபாயும், மகள் ஜெயஸ்ரீ பெயரில் அதே 1,61 067 ரூபாய் வங்கியில் உள்ளதாக கூறியுள்ளார்.
ஹூண்டாய் i10 கார், டொயோட்டோ ஃபார்சூனர் கார், 120 கிராம் தங்கம், 1.1 கிலோ வெள்ளி, மனைவியிடம் 760 கிராம் தங்கம், 4.75 கிலோ வெள்ளி, 10 கேரட் வைரம், மகன் ஜெய்தீபிடம் 120 கிராம் தங்கம், மகள் ஜெயஸ்ரீயிடம் 300 கிராம் தங்கம், மகன் ஆதித்யாவிடம் 120 கிராம் தங்கம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ரவீந்திரநாத்குமாரிடம் ரூ4 கோடியே16 லட்சத்து 27 ஆயிரத்து 224 ரூபாய் மதிப்பிலும், அவரது மனைவியிடம் 31,58,506 ரூபாய் மதிப்பிலும், மகன் ஜெய்தீப்பிடம் 5,23,131 ரூபாய் மதிப்பிலும், மகள் ஜெயஸ்ரீ பெயரில் 10,61,067 ரூபாய் மதிப்பிலும், மகன் ஆதித்யாவிடம் 3,60,000 ரூபாய் மதிப்பிலும் அசையும் சொத்துகள் இருப்பதாக கூறியிருக்கிறார்.
தனக்கு பூர்வீக சொத்துகள் இல்லை எனவும் தெரிவித்துள்ள ரவீந்திரநாத், வங்கிகள் மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய கடன் மற்றும் செலுத்தவேண்டிய தொகை 3 கோடியே 27 லட்சத்து 34 ஆயிரத்து 079 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.
அதில், தனது தம்பி ஜெயபிரதீப்பிற்கு 33 லட்சத்து 03 ஆயிரத்து 136 ரூபாயும், தனது தாய் விஜயலெட்சுமிக்கு 83 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் கடன் செலுத்தவேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.