தேனி தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்ததில் திமுகவினர் படுஅப் செட் ஆகியுள்ளனர். சைலண்டாக தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரிக்க முடிவு செய்துள்ள தகவலால் அமமுக தரப்பு ஏக உற்சாகத்தில் உள்ளது.
தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஈடு கொடுக்க மட்டுமின்றி வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டி தங்க .தமிழ்ச்செல்வனை களமிறக்கி விட்டுள்ளார் டிடிவி தினகரன். இதனால் சபாஷ் சரியான போட்டி என்று இப்போதே தேனியில் தேர்தல் களம் படுசூடாகிக் கிடக்கிறது.
திமுக கூட்டணியில் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதிலேயே அதிருப்தியில் இருந்த திமுகவினர் இப்போது ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்த உடன் படு அப்செட்டாகி உள்ளனர். கட்சி ரீதியிலும் காங்கிரசுக்கு செல்வாக்கு இல்லை. ஜாதி ரீதியிலும் செல்வாக்கு இல்லாத ஈவிகேஎஸ்சை நாம் தோளில் சுமப்பது வீண் என்று வெளிப்படையாகவே எதிர்ப்பு காட்டத் தொடங்கிவிட்டனர்.
பொதுவாக தென்மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், 6 துரை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற தொகுதிகளில் தேவர் சமுதாய வேட்பாளர்களே அதிகளவில் களமிறக்கப்படுவது வாடிக்கை. குறிப்பாக தேனியில் ஜாதி ஓட்டுக்கள் தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது என்பதால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது ஆரம்பத்திலேயே அதிருப்தி எழுந்துள்ளது.
இதனால் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகனுக்கும் தங்க. தமிழ்ச்செல்வனுக்கும் தான் நேரடிப் போட்டி என்ற நிலை உருவாகிவிட்டது. ஓ பிஎஸ் மகனை வீழ்த்த வேண்டுமானால் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரிப்பது தான் ஒரே வழி என திமுகவில் ஜாதி ரீதியிலான முக்கிய நிர்வாகிகள் கூட பகிரங்கமாக கூறி வருவதால் அமமுக தரப்பினர் இப்போதே படு உற்சாகத்தில் உள்ளனர்.