குக்கர் சின்னம் வழக்கில் அமமுகவை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளானதாக வழக்கறிஞர் தெரிவித்துள்னார்.
தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் முடிவடைவதால் குக்கர் சின்னம் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதி உத்தரவு வழங்கி விடும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அமமுகவினர் இருந்தனர். ஆனால் குக்கர் சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து விட்டது. வேறு சின்னம் வழங்குவதற்கும் அவகாசம் கேட்டு நாளைக்கு விசாரணையை ஒத்தி வைக்கச் செய்துவிட்டது தேர்தல் ஆணையம் .
இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் நடந்த குக்கர் சின்னம் வழக்கு குறித்து தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டே வஞ்சிக்கிறது. தொடர்ந்து காலதாமதம் செய்கிறது. குக்கர் சின்னம் வழங்க முடியாது என்றால் தமிழகத்தில் வேறு கட்சிகளுக்கு ஒதுக்க உள்ள சின்னங்கள் பட்டியல் விபரங்களை நீதிபதிகள் கேட்டதற்கும் நாளை தருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் நீதிபதிகள் கோபமடைந்து, வழக்கு விசாரணைக்கு வெறுமனே கையை வீசிக் கொண்டு வருவதா? உரிய ஆவணங்களை கொண்டு வருவதில் அலட்சியம் ஏன் என்று கண்டனம் தெரிவித்தனர் என்றார் ராஜா செந்தூர் பாண்டியன்.
இருந்தாலும் நாளைய விசாரணை முடிவில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது என்று ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்