தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்திற்கான நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவிருப்பதால் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க சார்பில் கனிமொழி, பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் உள்பட 62 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது . வேட்பு மனுக்கள் பரிசீலனை மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது .
இதில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ள,தமிழிசையின் கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்கு குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது . இதன் பின்னர், கனிமொழி வேட்பு மனு மீதான பரிசீலனையின் போது பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தாலும், கனிமொழியின் கணவர் சிங்கப்பூரில் நடத்திவரும் நிறுவனத்தில் தனக்கு பங்குகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்கான பான் எண்னை அவர் குறிப்பிடவில்லை. இதனால், அவரது மனுவையும் நிறுத்தி வைத்தனர் .
மேற்குறிப்பிட்ட காரணத்தினால் கனிமொழி மற்றும் தமிழிசையின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப் பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர் . இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .