தேர்தல் ஆணையத்திடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்க கூறி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும், அனைத்து அமமுக வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, அனைத்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கப்படுவதாக இருந்தால் அந்த சின்னம் மற்ற வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படக் கூடாது. இதனால், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்குவது தாமதம் எனத் தெரிகிறது.