நாங்கள் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதற்கு கொதித்தெழுந்துள்ளார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் . நீங்கள் கற்ற பரம்பரை எல்லாம் கிடையாது தமிழகத்தின் உரிமைகளை விற்ற பரம்பரை என்று தமிழிசையாக ஆவேசமாக விமர்சித்துள்ளார் கருணாஸ் .
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்புமனு பரிசீலனையின் போது சர்ச்சையானது.தமிழிசை தமது மத்திய அரசு நிறுவன கவுரவ பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவருடைய கணவரின் வருமானத்தை குறிப்பிடவில்லை. மகள் டாக்டர் படிப்பை தெரிவிக்கவில்லை என்பதையெல்லாம் திமுக தரப்பில் சுட்டிக்காட்டியதால் வேட்புமனுவை ஏற்பதில் இழுபறியானது.
பின்னர் உரிய ஆதாரங்களை தமிழிசை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வழியாக வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, என் மீது எந்த வித குற்ற வழக்கும் இல்லை. எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. முறையாக சம்பாதித்த பணத்திற்கு தவறாமல் வருமான வரி கட்டி வருகிறேன் என்று கூறியவர், நாங்கள் கற்ற பரம்பரையைச் சேர்ந்தவர்கள், குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கிடையாது என்று தன் பாணியில் உரக்கக் கூறியிருந்தார்.
குற்றப் பரம்பரை என்ற வார்த்தையை தமிழிசை எப்படிக் கூறலாம்? அப்படியானால் யாரைக் குற்றப் பரம்பரை என்று கொந்தளித்துள்ளார் முக்குலத்தோர் புலிப் படையின் தலைவரும், நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ். நீங்கள் ஒன்றும் கற்ற பரம்பரை கிடையாது. தமிழகத்தின் உரிமைகளை விற்ற பரம்பரை நீங்கள் என்று தமிழிசையை விமர்சித்துள்ளது பரம்பரை சர்ச்சையை அதிகரித்துள்ளது.