கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தொகுதியில் உள்ள குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்குமாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் சூப்பர் ஐடியா என்று ஒரு தரப்பும், பிரச்னையே நீங்கதான் ஓடிடுங்க.. மற்றொரு தரப்பில் எதிர் விமர்சனங்கள் என ஏராளமான கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கடந்த தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜோதிமணியே திமுக கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த 2014 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி யிட்டதால் 4-வது இடமே கிடைத்து டெபாசிட் இழந்தார் ஜோதிமணி. இம்முறை வலுவான திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதால் தெம்பாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு சமீபத்தில் திமுகவில் இணைந்து கரூர் மாவட்ட பொறுப்பாளராகியிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பக்கபலமும் ஜோதிமணிக்கு தெம்பளித்துள்ளது.
மக்கள் பிரச்னைகளை தீர்க்கிறேன் என்ற ஆர்வக்கோளாறில் டிவிட்டரில் பதிவிட்ட ஜோதிமணி, கரூர் தொகுதி மக்கள் தங்கள் பகுதி குறைகள்,கோரிக்கைகளை தமக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தார். இந்தப் பதிவு வெளியான நிமிடம் முதலே ஆதரவான மற்றும் எதிர்மறையான கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
சூப்பர்க்கா... அருமை அக்கா... நல்ல யோசனை... உங்க பணி நாட்டுக்கு தேவை... என்று ஒரு தரப்பில் பாராட்டுக்கள் குவிய, மற்றொரு தரப்பிலோ கரூர் தொகுதியில நீங்க தான் பிரச்னையே ஓடிடுங்க.. உங்க நண்பர் செந்தில் பாலாஜி தன் தம்பி மூலம் ரவுடித்தனம் பண்றார்... மணல் கொள்ளை அடிக்கிறார் .. இதெல்லாம் தடுக்க முடியுமா? என்று எதிர்மறையாக பதி விட்டுள்ளார்.
இன்னொரு தரப்பினரோ நிஜமாத்தானா? தேர்தலுக்காக ஸ்டண்டா ? என்றதுடன் அப்படியே குளிக்க நாலு குடம் தண்ணீர் கிடைக்குமா? என்றும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.