தேர்தல் ஆதாயத்திற்காக விண்கலத்தை தாக்கும் ஏவுகணை ரகசியத்தை பிரதமர் மோடி வெளியிட்டது மாபெரும் துரோகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் திடீரென பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போகிறேன். முக்கிய சேதி ஒன்றை சொல்லப் போகிறேன் என்று டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். பிரதமர் மோடி என்ன சேதி சொல்லப் போகிறாரோ? என்று நாடே பெரும் பரபரப்பானது. சிறிது நேர தாமதத்திற்குப் பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், விண்வெளியில் எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து வல்லரசாக மாறியுள்ளோம் என்பதை பெருமையாக அறிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு, இதற்குத்தானா இத்தனை பில்டப் என்று மக்களிடம் உப்புச் சப்பு இல்லாமல் போய் விட, எதிர்க்கட்சிகளோ பிரதமரின் செயலை கடுமையாக விமர்சனம் செய்தனர். நாட்டின் ரகசியத்தை பிரதமரே இப்படி பெருமைக்காக அம்பலப்படுத்துவதா? என்று விமர்சித்தனர்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, நாடக தின வாழ்த்துகள் என்று பிரதமர் மோடியை கிண்டலடித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், பிரதமர் மோடியின் செயல் நாட்டுக்கு செய்யும் துரோகம் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் திறன் பல ஆண்டுகளாக நமக்கு இருந்து வந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றி வந்தார்கள். ஆனால் பாஜக அரசு ரகசியத்தை வெளியிட்டது துரோகம். மேலும் தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? எல்லாம் தோல்வி பயம்தான் காரணம் என்று டிவிட்டரில் ப.சிதம்பரம் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.