மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜக அரசில் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் வங்கிகள் விதித்த அபராதம் திரும்பச் செலுத்தப்படும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் உறுதி அளித்துள்ளார்.
திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு ஊழல் அரசு என்று கூறி ஆளுநரிடம் 206 பக்க ஊழல் பட்டியலை வழங்கிய பா.ம.க. இன்றைக்கு அதே கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. பாமக கூறிய 206 பக்க ஊழல் குற்றச்சாட்டு பட்டியலுடன் அவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வோம்.
மத்தியில் ஆளும் மோடி அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வாய்ப்பு என்றார்கள். ஆனால் 5 ஆண்டு ஆட்சியில் வேலை இல்லாத் திண்டாட்டம் தான் அதிகரித்துள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி மதச்சார்பின்மை, மொழிப் பற்று இட ஒதுக்கீடு என கொள்கையுள்ள கூட்டணி வெற்றி பெறும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி பாஜக அரசு அபராதம் என்ற பெயரில் பிடித்தம் செய்த தொகை முழுவதும் அவரவர் கணக்கில் செலுத்தப்படும் என்றும் ப.சிதம்பரம் உறுதி அளித்தார்.