அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருமா? இல்லையா? என்ற இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பாமகவை விட கூடுதல் தொகுதி கேட்ட விஜயகாந்த், தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பின் திமுக கூட்டணியில் இணைவாரா? என்ற பரபரப்பு நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை கொண்டு வந்து விட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் பாஜக ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் கூட்டணி அமைவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்த நிலையில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணையுமா என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் செய்தியார்களைச் சந்தித்த அவர், ``அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பதில் எந்த இழுபறியும் இல்லை. எல்லாம் முடியும் நேரத்தில் கண்டிப்பாக முடியும். எங்களது கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி, சக்தி வாய்ந்த கூட்டணி. எங்கள் மெகா கூட்டணியை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார். எங்கள் மெகா கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறும். அதிமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.
மற்ற கட்சிகள் அதிமுகவில் இணையக் கூடாது என்றே அவர் கருதுகிறார். விஜயகாந்தை சந்தித்த பிறகு மு.க.ஸ்டாலின் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறி இருக்கிறார். தற்போது பயத்தின் உச்சகட்டத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார். அதனால் தான் அவரது வார்த்தைகள் குழறுகிறது. ஒரு தெளிவு என்பதே இல்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கட்சியை கூட ஸ்டாலின் கூட்டணிக்கு அழைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கு ஆயத்தமாகி வருகிறது" என்றார்.