தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா சென்று சிகிச்சைப்பெற்றுத் திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லோக்சபா தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் புதிய திருப்பமாக விஜயகாந்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் கூடுதல் இடங்களைக் கேட்டு அடம்பிடிக்கிறது தே.மு.தி.க. இன்னொரு பக்கம் தினகரனுடன் கூட்டணி சேர வேண்டும் என விஜயகாந்தை திருநாவுக்கரசர் வலியுறுத்துகிறார். இப்படியான நிலைக்கு மத்தியில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
`உடல் நலம் விசாரிக்கவே வந்தேன். நான் உடல்நலம் சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது பார்க்கவந்தவர் கேப்டன். அவரைச் சந்தித்தது மகிழ்ச்சி. அவர் எப்போதும் நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று கூறினார் ரஜினி. முன்னதாக விஜயகாந்த் ரஜினியை வழியனுப்பி வைக்க எழ அவரை ரஜினி கன்னத்தில் தட்டிக் கொடுத்து கிளம்பினார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதைப்பார்த்த இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவுடன் ஷேர் செய்து கருத்து பதிவிட்டிருந்தார்.
அதில், ``இந்த மனிதநேயம்தான் ரஜினியிடம் எனக்குப் பிடித்த முதல் விஷயம்.. அவரின் தழுவலும் விஜயகாந்த் அவர்களைக் கன்னத்தில் தொடும் உணர்வும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது... கண்ணீர் வரவைக்கும் காணொலி... தூர இருந்து உங்களை ரசிக்கிறேன் மதிக்கிறேன்... அரசியல் தாண்டி... நீங்கள் நீடூடி வாழ்க" என்று பதிவிட்டுள்ளார். அரசியல் தாண்டி... நீங்கள் நீடூடி வாழ்க என அவர் வாழ்த்தியது ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றே கூறியுள்ளார் என ரஜினி ரசிகர்கள் தற்போது சேரனுக்கு எதிராக கொடிபிடிக்க தொடங்கியுள்ளனர்.