கெத்து காட்டிய விஜயகாந்த் ..!ஒரே நாளில் திறந்த அனைத்து கூட்டணி கதவுகள்..!கேப்டன்னா சும்மாவா..?படு உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்!

dmdk cadres very happy on Vijayakanths political move

by Nagaraj, Feb 23, 2019, 10:05 AM IST

பாஜக,அதிமுக,திமுக, காங்கிரஸ்,அமமுக என அனைத்துக் கட்சிகளையும் இந்தத் தேர்தலில் தேமுதிக பக்கம் கவனத்தைத் திரும்பச் செய்த விஜயகாந்தை, கேப்டன்னா... சும்மாவா? என்று தேமுதிக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தேமுதிக ஆரம்பித்து 2006-ல் சந்தித்த முதல் சட்டசபைத் தேர்தலிலேயே தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று கெத்து காட்டினார் விஜயகாந்த்.திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்த் வருவார் என்ற பெரும் எதிர்பார்ப்பும் நிலவியது. தொடர்ந்து வந்த உள்ளாட்சித் தேர்தல், 2009 லோக்சபா தேர்தலிலும் தனித்து நின்று பிற கட்சிகளுக்கு சவால் விட்டார் விஜயகாந்த்.

இதனால் அடுத்து 2011 தேர்தலில் விஜயகாந்த்துக்கு மவுசு அதிகரிக்க, திமுகவும், அதிமுகவும் கூட்டணிக்கு வலைவீசின. அதிமுக வலையில் சிக்கிய விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். ஆனால் சமயோசித ஜெயலலிதா, விஜயகாந்தை மட்டம் தட்டி தேமுதிக எம்எல்ஏக்களை அணி மாறச் செய்து அக்கட்சியையே நிலைகுலையச் செய்து விட்டார்.

தொடர்ந்து 2014-ல் பாஜகவுடன் கூட்டு, 2016-ல் தமது தலைமையில் மக்கள் நலக் கூட்டணி என்று வீழ்ச்சியையே சந்தித்து வந்த விஜயகாந்தின் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. தேமுதிக இனி அவ்வளவுதான் என்ற நிலைக்கும் சென்றது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் சிகிச்சையால் அரசியல் பணிகளில் முடங்கிக் கிடந்த விஜயகாந்த், அமெரிக்க சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வரும் மக்களவைத் தேர்தல் களத்திலும் தேமுதிகவின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆரம்பித்து விட்டார்.

பாஜக கூட்டணிக்குத் தான் விஜயகாந்த் விரும்பினார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விஜயகாந்தை வீட்டில் சென்றே சந்தித்தார். மூனு, நாலு என குறைந்த சீட் பேரம் பேச, பாமகவுக்கு நான் என்ன குறைச்சல் என்று ஏக கடுப்பான விஜயகாந்த், விறுவிறுவென அடுத்தக் கட்ட 'மூவ்' எடுத்தார்.
திருநாவுக்கரசருடன் சந்திப்பு, ரஜினியுடன் சந்திப்பு, 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு என்று விஜயகாந்த் தடாலடி காட்ட, ஒட்டு மொத்த தமிழக அரசியல் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.

உச்சக்கட்டமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் விஜயகாந்த் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்ததாகக் கூற, ஒரே நாளில் விஜயகாந்த்துன்னா சும்மாவா? என்று தேமுதிக தொண்ட்களை உற்சாகத் துள்ளல் போட வைத்துள்ளது.

இதனால் அதிமுக, திமுக, அமமுக என அனைத்துக் கூட்டணிக் கதவுகளும் விஜயகாந்துக்காக திறந்து கிடக்க தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரப்போகிறது என்ற உச்சக்கட்ட சஸ்பென்ஸை தமிழக அரசியலில் உருவாக்கி விட்டார் கேப்டன் விஜயகாந்த்.

You'r reading கெத்து காட்டிய விஜயகாந்த் ..!ஒரே நாளில் திறந்த அனைத்து கூட்டணி கதவுகள்..!கேப்டன்னா சும்மாவா..?படு உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்! Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை