கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையின் அமையவிருக்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
பொது, பொது நிர்வாகம், உள்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வகிப்பார்.
துரைமுருகன், சிறுபாசனம், பாஸ்போர்ட், கனிம சுரங்கங்கள் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பார்.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கலை கவனிக்கும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சராக கே.என். நேரு பொறுப்பேற்பார்.
இ. பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், க.பொன்முடி, உயர்கல்வித் துறை அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். எ.வ. வேலு, பொதுப்பணித்துறைக்கும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கும் அமைச்சர்களாக பொறுப்பேற்பர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், தொழில்துறையை தங்கம் தென்னரசும் கவனிப்பர். சட்டத்துறை அமைச்சராக எஸ்.இரகுபதியும், வீட்டு வசதித் துறை அமைச்சராக க. முத்துசாமியும் பதவியேற்பர்.
கே.ஆர். பெரியகருப்பன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், ஊரக தொழிற்துறை அமைச்சராக தா.மோ. அன்பரசனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். செய்தித் துறைக்கு மு.பெ.சாமிநாதனும், சமூக நலன்- மகளிர் உரிமை துறைக்கு கீதா ஜீவனும் அமைச்சர்களாக பதவியேற்பர்.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைக்கும், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறைக்கும் அமைச்சர்களாவர். வனத்துறை அமைச்சராக கா.ராமச்சந்திரனும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக அர.சக்கரபாணியும் பொறுப்பேற்பர்.
செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறையும், ஆர். காந்திக்கு கைத்தறி துறையும் வழங்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்துக்கு மா. சுப்பிரமணியன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிகவரித்துறை அமைச்சராக பி.மூர்த்தியும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பி.கே.சேகர்பாபுவுக்கு இந்து சமய அறநிலையத் துறையும், பழனிவேல் தியாகராஜனுக்கு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறையும் வழங்கப்பட்டுள்ளது.
சா.மு.நாசர், பால்வளத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக கே.எஸ்.மஸ்தானும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பொறுப்பேற்க உள்ளனர்.
சுற்றுச்சூழல், இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக சிவ.வீ.மெய்யநாதனும், தொழிலாளர் நலத் துறை அமைச்சராக சி.வி.கணேசனும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக த. மனோ தங்கராஜூம், சுற்றுலாத் துறை அமைச்சராக மதிவேந்தனும், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக என். கயல்விழி செல்வராஜூம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது