பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட பெருந்தலைகள் பரப்புரையில் ஈடுபட்டும் மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாவால் வெற்றி பெற இயலவில்லை.
2019 தேர்தலில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 40.3 ஆக இருந்தது. இந்த தேர்தலில் அது ஏறத்தாழ 3 சதவீதம் குறைந்து 37.7 சதவீதமாக உள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு 43.3 சதவீதமாக இருந்த திரிணமூல் காங்கிரஸின் வாக்கு வீதம் இந்தத் தேர்தலில் 48.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இரு கட்சிகளுக்குமிடையே கிட்டத்தட்ட 10 சதவீதம் வித்தியாசம் உள்ளது.
எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விடுவது என்ற வைராக்கியத்தோடு தேர்தல் வேலைகளை செய்த பாரதிய ஜனதா தலைவர்களையும் தொண்டர்களையும் மம்தா பானர்ஜியும் அவரது தொண்டர்களும் வெற்றி கொண்டதற்கு சில காரணங்களை அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
வேற்று மாநிலத்தவரின் கட்சி:
பாரதிய ஜனதா கட்சி பெருமளவில் தேர்தல் பரப்புரை செய்தது. ஆக்ரோஷமான கூட்டங்களாக அவை அமைந்தன. ஆனால், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல மத்திய அமைச்சர்கள், பல மாநிலங்களில் முதல் அமைச்சர்கள் மேற்கு வங்காள தெருக்களில் உலவினர். இது பாரதிய ஜனதா வங்க மொழி பேசுகிற மக்களின் கட்சியாக அல்லாமல், வெளியாட்களின் கட்சியாக உள்ளது என்ற பிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த திரிணமூல் காங்கிரஸுக்கு பெருமளவில் உதவியது.
தோற்றுப்போன கறுப்பு ஆடுகள்
திரிணமூல் காங்கிரஸிலிருந்து பல தலைவர்கள் பாரதிய ஜனதா பக்கம் ஓடினர். அவர்கள் பெருமளவில் வாக்குகளை பாஜ பக்கம் திருப்புவார்கள் என்று கட்சியின் மேலிடம் நம்பியது. பகுதிவாரியாக கட்சியில் உள்ள வெற்றிடங்களை இந்தத் தலைவர்கள் நிரப்புவார்கள் என்றும் பாரதிய ஜனதா நம்பியது. ஆனால், திரிணமூல் காங்கிரஸிலிருந்து வந்து பாரதிய ஜனதாவின் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்த 46 பேரில் 3 பேர் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றனர்.
பெருந்தொற்று நோய் பரவல்:
கொரோனா பரவலையும் அதை மத்திய அரசு எதிர்கொண்ட விதமும் மேற்கு வங்காள வாக்காளர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். எட்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் முதல் ஐந்து இடங்களிலும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றாலும் கடைசி மூன்று இடங்களிலும் முழு ஆதிக்கத்தையும் செலுத்தியுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடந்த இடங்களில் பெரிய வித்தியாசம் தெரியவில்லையென்றாலும் அதன் பின்பு நடந்த தேர்தல்களில் நாட்டில் கொரோனா பரவியது வாக்காளர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
விழித்துக்கொண்ட மம்தா:
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் அதிகரித்து. ஆகவே அத்தேர்தலுக்குப் பிறகு மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் பல சமூகநல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அரசு அலுவலர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அரசின் திட்டங்கள் வந்து சேருகின்றனவா என்று கேட்டறிந்தனர். மாநில அரசு நடைமுறைப்படுத்திய மக்கள் நல திட்டங்களை பற்றிய விளக்கம் பொது மக்களிடம் ஏற்ற முறையில் கொண்டு சேர்க்கப்பட்டது. குடும்பத்திலுள்ள மூத்த பெண்மணிக்கு அதாவது ஆண் தலைவருக்கு அல்ல, குடும்பத்தில் மூத்தவராக உள்ள பெண்மணிகளுக்கென சிறப்பு திட்டத்தை செயல்படுத்தினார்.
உள்ளூர் பற்று
ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை பாரதிய ஜனதா பரப்புரையில் முன் வைத்தது. இது ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் நன்கு எடுபட்டாலும் திரிணமூல் காங்கிரஸ் ஜெய் மாதுர்கா என்ற கோஷத்தை முன் வைத்தது. இது மக்களை மம்தா பக்கமாக திருப்பியது.
இவை அனைத்தும் சேர்ந்துமே மம்தா பானர்ஜிக்கு மகத்தான வெற்றியை கொடுத்துள்ளன என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.