இந்திய ராணுவப் படையை மோடியின் ராணுவம் என உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாகிஸ்தானின் மீது நிகழ்த்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டைக் பற்றி சிலாகித்துப் பேசினார். காங்கிரஸ் ஆட்சி தீவிரவாதிகளுக்கு பிரியாணி வழங்கியதாகவும், ஆனால் மோடியின் ராணுவம் வெடி குண்டுகளை பரிசளிப்பதாகவும் அவர் கூறினார். இந்திய ராணுவத்தின் வீரச் செயலை பா.ஜ.க சொந்தம் கொண்டாடும் இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கு பா.ஜ.க பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மோடியின் ராணுவம் என்று பேசுவது இந்திய ராணுவத்தின் கண்ணியத்தை குறைப்பது போல் உள்ளது என்று காட்டமாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் தேசத்தின் சொத்தும் என்றும் பா.ஜ.க சொந்தம் கொண்டாடுவது சரியல்ல என்றும் மம்தா பானர்ஜி விலாசியுள்ளார்.