நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மகளிருக்கு வேலை வாய்ப்பில் 33%, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் வெளியிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயாரித்த இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:2019 பொதுத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நீட் தேர்வுக்குப் பதில் மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்.
அரசுத் தேர்வுகள், வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது .
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
விவசாயத்திற்கென தனி பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
தனிநபர் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம் வழங்கப்படும்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்
வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்
ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் செய்யப்படும். பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும்.
வங்கிக் கடன் திரும்பச் செலுத்தாத விவசாயிகள் மீது கிரிமின்ல நடவடிக்கை எடுக்கப்படாது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
பொதுப்பட்டியலில் உள்ள பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு பால் , முட்டை வழங்கப்படும்.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும்.
9 முதல் 12-ம் வகுப்புக்கு தொழிற்கல்வி வழங்கப்படும்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதி ஆயோக் கலைக்கப்பட்டு மீண்டும் திட்டக்குழு கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள், வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.