பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வேட்பு மனுவில், பல உண்மைகளை மறைத்து பொய்யான தகவல்களை கூறியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், அவரை போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தொடர்ந்து 8 முறை போட்டியிட்டு வென்ற தொகுதியாகும்.இந்த முறை வயதை காரணம் காட்டி அத்வானியை ஓரம் கட்டி விட்டது பாஜக .
வரும் 23-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள காந்திநகர் தொகுதியில் போட்டியிட கடந்த 31-ந் தேதி அமித் ஷா வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது தமது சொத்து, வருமானம் உள்ளிட்டவற்றை அபிடவிட்டில் அமித் ஷா நிறைய தவறான தகவல்களை தெரிவித்ததாக, வேட்பு மனு பரிசீலனையின் போது காங்கிரஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தும் அமித் ஷாவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனால் தற்போது டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. வங்கி ஒன்றில் அமித் ஷாவின் மகன் 25 கோடி கடன் பெற்றதற்கு ஈடாக தமது சொத்தை அடமானம் வைத்ததை அமித் ஷா மறைத்து விட்டார். மேலும் தம் பெயரில் உள்ள காலி மனைகளின் மதிப்பை மிகவும் குறைத்துக் காண்பித்துள்ளார். இவ்வாறு பல்வேறு உண்மைகளை மறைத்து வேட்பு மனுத்தாக்கல் செய்த அமித் ஷாவை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில், தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப் பட்டுள்ளது.