வாக்குச்சாவடியில நாம மட்டும் தான் இருப்போம்...என்ன நடக்கும்னு தெரியும்ல... புரியுதா? என்றெல்லாம் பேசி கள்ள ஓட்டு, பூத் கைப்பற்றுதலுக்கு தூண்டும் வகையில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி நெருங்க, நெருங்க அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. கடந்த 4-ந் தேதி காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து திருப்போரூரில் அன்புமணி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. வாக்குச் சாவடியில் நாம மட்டும் தான் இருக்கப் போறோம்... அப்புறமென்ன... என்ன நடக்கும்னு தெரியும்ல... புரியுதுல்ல... என்றெல்லாம் ஜாலியாக பேசுவது போல் அன்புமணி பேசி பாமக தொண்டர்களை உசுப்பேற்றினார்.
அன்புமணியின் இந்தப் பேச்சு, வன்முறையை தூண்டுவதாகவும், கள்ள ஓட்டுப் போட தொண்டர்களை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடமும் திமுக தரப்பில் புகார் செய்தனர்.
திமுகவின் இந்தப் புகாரையடுத்து, அன்புமணி மீது வழக்குப் பதியுமாறு திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.