தமிழக அரசியல் களத்தில் எப்போதும் திராவிடக் கட்சிகளின் மேடைப் பேச்சாளர்கள்தான் தரக்குறைவான வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள். வாடா, போடா என்று ஆரம்பித்து இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச வார்த்தைகள் என்று கூட சிலர் அத்துமீறுவதுண்டு.
இந்த தேர்தலில் தலைவர்களும் தரம் தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணிதான், தேர்தல் வருவதற்கு முன்பே கடுமையான வார்த்தைகளை ஆரம்பித்து வைத்தார். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பிடிக்கும் வரை அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் திட்டாத வார்த்தைகள் இல்லை. ‘‘இவர்களுக்கு என்ன தெரியும், நிர்வாகம் தெரியுமா? ஜெயலலிதாவுக்கு பணம் வாங்கி்க் கொடுத்த புரோக்கர்கள். அவர் கீழே விழு என்றால் விழுவார்கள். கார் டயரை நக்கச் சொன்னால் அதையும் செய்வார்கள். டயர் நக்கிகள்...’’ என்று அவர் சொன்னது வீடியோவில் பதிவாகி விட்டது. அது இப்போது ‘எக்கோ’வாக சமூக ஊடகங்களில் ஒலித்து கொண்டே இருக்கிறது.
ஆனாலும், அன்புமணி இப்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரையும் வாழ்த்திப் பேசத் தொடங்கி விட்டார். இருவரும் நல்லாட்சி தருகிறார்கள் என்றே சர்டிபிகேட் கொடுத்து விட்டார். அதனால், அவரையும், பா.ம.கவையும் அ.தி.மு.கவால் விமர்சிக்க முடியாமல் போய் விட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க..ஸ்டாலின் இன்னும் கடுமையாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ்சை வசைபாடிக் கொண்டிருக்கிறார்.
‘‘அ.தி.மு.க.வை பா.ஜ.க. என்ற மார்வாரியிடம் அடகு வைத்து விட்ட அடிமைகள், எடுபிடிகள்’’ என்று ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தி.மு.க. சார்பில், ‘ஆதிக்கவாதிகளும் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம்’ என்ற தலைபை்பில் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட முழுப்பக்க விளம்பரத்தில், ‘‘பி.ஜே.பி.யிடம் கைகட்டி, வாய்ப்பொத்தி, அடிவருடிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.! நயவஞ்சக நாடகமாடுகிறது பி.ஜே.பி., நச்சுப் பற்களுடன் புன்னகைக்கிறது அ.தி.மு.க! எடுபிடிகளும், அடிமைகளும் வேண்டாம் என உறுதியேற்போம்’’ என்றெல்லாம் காரசாரமாக விமர்சித்தது.
இதைப் பார்த்ததும்தான் முதலமைச்சர் பழனிசாமிக்கு கோபம் அதிகரித்து விட்டது. ‘‘ஸ்டாலின் கூலிப்டைத் தலைவன் போல் இருக்கிறார். மரியாதையாக அவர் பேச வேண்டும். இல்லாவிட்டால், நான் பேசினால் காது சவ்வு கிழிந்து விடும் அளவுக்கு பேசுவேன்...’’ என்று பிரசாரத்தில் கொதித்திருக்கிறார்.
ஏற்கனவே ஸ்டாலின் பேட்டை ரவுடி போல் பேசுகிறார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியிருக்கிறார். இதே போல், மற்ற அமைச்சர்களும் இப்போது ஸ்டாலின் மீது பாய்ச்சல் காட்டுகிறார்கள்.
கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் கூட கடுமையான மோதல்கள் இருந்திருக்கின்றன. ‘‘ஒரு கிரிமினல் பட்ஜெட் படிக்கலாமா’’ என்று சட்டசபையில் கருணாநிதியிடம் ஜெயலலிதா நேருக்கு நேர் கேட்டதாகவும், அதற்கு அவர் ஒரு நடிகரின் பெயரைச் சொல்லி, ‘அவரிடம் போய் கேள்’ என்று பதிலளித்ததாகவும் அதனால் சட்டசபையில் கலவரம் வெடித்ததும் வரலாறு சொல்கிறது.
ஆனாலும், இப்போதுதான் டயர்நக்கி, பேட்டை ரவுடி, எடுபிடி என்ற லெவலுக்கு தமிழக அரசியல் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்த தேர்தலுக்கு இது எந்த லெவலுக்கு செல்லுமோ?