மே 23ம் தேதி நாங்கள் ஆட்சிக்கு வரப் போவது நிச்சயம் என்று திடீரென தி.மு.க. புள்ளிகள் பரபரப்பாக பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்ததுதான்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இருக்குமா, இல்லையா என்பது மே 23ம் தேதி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணிக்கைக்குப் பிறகுதான் உறுதியாக தெரிய வரும். தற்போது சட்டசபையில் தி.மு.க.வுக்கு 89, காங்கிரசுக்கு 8 என்று இந்த கூட்டணிக்கு 97 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சை உறுப்பினராக டி.டி.வி. தினகரன் உள்ளார். இது தவிர, அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தமிமுன் அன்சாரி தற்போது நாடாளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. பக்கமாக சாய்ந்து விட்டார். கருணாஸ், தினகரனின் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக போய்விட்டார்.
ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருக்கும் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இவர்களையும் சேர்த்தால் 104 பேர் அரசுக்கு எதிராக இருக்கிறார்கள். தற்போதுள்ள சட்டசபையில் மொத்தம் 212 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, அதில் எதிரணிக்கு 104 போக 108 பேர்தான் முதலமைச்சர் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளை விட்டுவிட்டு, 21 தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஆணையம் முதலில் தேர்தலை அறிவித்தது. இதில் 8 தொகுதிகளில் ஜெயித்தால் போதும், ஆட்சி தப்பி விடும் என்று அ.தி.மு.க. தரப்பு கணக்கு போட்டது. தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே மூன்று தொகுதிகளில் தேர்தலை நிறுத்தி விட்டதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சுமத்தப்பட்டது.
அதற்கு பின்பு, சூலூர் எம்.எல்.ஏ. மறைந்ததால் அந்த தொகுதியும் காலியானது. இந்த 4 தொகுதிகளுக்கும் இப்போது தேர்தல் நடத்தாவிட்டால், ஆட்சி தப்பி விடும் என்று அ.தி.மு.க.தரப்பில் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தற்போது இந்த 4 தொகுதிகளிலும் மே 19ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நான்கையும் சேர்த்து மே 23ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறது.
இதற்கிடையே, ஜூனியர் விகடன் பத்திரிகையில் வெளியான 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கருத்து கணிப்பில் 17ல் திமுக வெற்றி பெறும் என்றும், ஒன்றில் மட்டும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது உறுதியானால், சட்டசபையில் தி.மு.க. அணி பலம் 114 ஆக உயரும். அ.தி.மு.க. பலம் வெறும் 109 ஆகவே இருக்கும்.
இது தவிர தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்றால் கூட அதற்கு பெரும்பான்மை கிடைக்காது. அதனால், மே 23க்கு பிறகு தி.மு.க. ஆட்சி அமைவது நிச்சயம் என்று அக்கட்சிப் பிரமுகர்கள் கணக்கு சொல்கிறார்கள். இதனால், தி.மு.க.வினர் இப்போது சட்டசபை இடைத்தேர்தல்களில்தான் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அக்கட்சிக்குள்ளும் ஆட்சியைப் பிடிக்கும் பேச்சே அதிகமாகி விட்டது.
ஆனால், அ.தி.மு.க. தரப்பிலோ 22 தொகுதிகளில் குறைந்தது 12 தொகுதிகளை பிடித்து விடுவோம் என்றும் அதனால் ஆட்சி கலைய வாய்ப்பே இல்லை என்றும் சொல்கிறார்கள். எப்படியோ, மே 23ல் வெளியாகப் போகும் தேர்தல் முடிவுகள், பிரதமரை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை. தமிழக முதலமைச்சரையும் தான் தீர்மானிக்கப் போகிறது.