பா.ஜ.வின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டுமே புரியும் என அவரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிண்டல்செய்தார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசி மக்களவை தொகுதியில் தி.மு.க. நேரடியாக போட்டியிடுகிறது. கடைசியாக கடந்த 1991ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தி.மு.க. தோல்வி கண்டது. அதன்பிறகு அந்த தொகுதியை தனது கூட்டணி கட்சிக்கு விட்டு கொடுத்து வந்தது.
ஆனால் விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியை கூட்டணிக்கு கொடுக்காமல் தனது வேட்பாளரை தி.மு.க. நிறுத்தியுள்ளது. அந்த தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் தூய்மையான ஆட்சி நடைபெறவில்லை ஊழல் ஆட்சிதான் நடைபெறுகிறது. பா.ஜ.வின். தோ்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டும்தான் புரியும். அதனை அவர் வரவேற்கவிட்டால்தான் நாம ஆச்சரியப்படனும். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்தை கிண்டல் செய்து அவர் பேசினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், நிதிகள் இணைப்புக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனை வரவேற்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதனை குறிப்பிட்டுதான் ஸ்டானின் ரஜினியை கிண்டல் செய்துள்ளார்.