நாட்டிலேயே மிகவும் மோசமான ஒரு அமைப்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளதாகவும், பாஜகவின் ஒரு அங்கமாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஓட்டு மெஷின்கள் மீது நம்பிக்கை இல்லை. மீண்டும் பழைய வாக்குச் சீட்டை முறையை கொண்டு வர வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் தர்ணா நடத்தப் போவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள 25 மக்களவை மற்றும் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது.இந்தத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை என்று சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு .அமராவதியில் இன்று செய்தியாளர்களிடம் இது குறித்து விரிவாக விளக்கமளித்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
என்னுடைய 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், தேர்தல் ஆணையத்தின் இது போன்ற மோசமான செயல்பாடுகளை கண்டதில்லை. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தவில்லை. சேஷன் போன்ற நேர்மையான அதிகாரிகள் அங்கம் வகித்த தேர்தல் ஆணையம் , இப்போது பாஜகவின் ஒரு அங்கமாகவும், பிரதமர் மோடியின் சொல்லுக்கு ஆடும் பொம்மையாகவும் மாறி விட்டது.
ஓட்டு மெஷின்கள் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி விட்டது. நேற்று வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 4343 எந்திரங்கள் பழுதாகி விட்டன. இதனால் பல மையங்களில் மதியம் வரை வாக்குப்பதிவு தொடங்கவில்லை. வாக்காளர்களும் அலைக்கழிக்கப்பட்டனர். மேலும் எந்திரங்களின் கோளாறை சரி செய்ய வரவழைக்கப்பட்டவர்களை எப்படி நம்புவது? தில்லு முல்லு செய்ய வந்தார்களா? என்றும் தெரியவில்லை. வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடும் மோசமாகி விட்டது. எங்களை வேண்டாம் என்றால் மக்களே ஓட்டுப் போட்டுத் தோற்கடித்துவிடுவார்கள். ஆனால் எங்களை தோற்கடிக்க தேர்தல் ஆணையமே செயல்படுவது என்ன நியாயம் என்று சந்திரபாபு நாயுடு கொந்தளித்தார்.
மேலும், யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் எந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் நாளை சீராய்வு மனு செய்வதுடன், பழைய வாக்குச் சீட்டு முறையை வலியுறுத்தி டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விரைவில் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.