தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது. மேலும், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூட திடீர் திடீரென மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த நிலையில், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் மக்கள், ‘‘தேர்தலுக்கு மட்டும் வருகிறீர்களே, இத்தனை நாளா எங்க பிரச்னையை கேட்க யாராவது வந்தீர்களா?’’ என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வகையில், திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கத்தில் கோயிலை சுற்றி வசிக்கும் மக்களுக்கு நிலப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவர்கள் வசிக்கும் இடம், ஸ்ரீரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமானது என்று கூறி, அவர்களை அகற்றுவதற்கு கடந்த 2004ம் ஆண்டில் அறநிலையத்துறை முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது, கோயிலைச் சுற்றி 329 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை அகற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் வழக்கும் தொடுத்தது.
ஆனால், அந்தப் பகுதி மக்கள் ஏற்கனவே பட்டா, சொத்து ஆவணங்கள் வைத்திருப்பதாகவும் கூறி அதை எதிர்க்கின்றனர். அறநிலையத் துறையின் இந்த நடவடிக்கையில் இருந்து தங்கள் இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை.
இதனால், தற்போது ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் இந்தப் பிரச்னையை முன் வைக்கின்றனர். ஆனால், கோயில் இடத்தை மீட்பதில் உறுதியாக இருக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதால் ஆளும் அ.தி.மு.க.வும் இவர்களை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, அரங்க மாநகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வெங்காடச்சலம் இதை தெரிவித்திருக்கிறார். மேலும், ஏப்ரல் 18ம் தேதி தேர்தலை புறக்கணிப்பதுடன், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.