கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்தன.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் சுப்மன் கில் 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் விளாசி அதிகபட்சமாக 65 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல் 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் விளாசி 45 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர வகை செய்தார்.
டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களான கிறிஸ் மோரி, ரபடா, கீமோ பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 1 விக்கெட்டை எடுத்தார்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, 18.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 63 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் விளாசி 97 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பெறச் செய்தார்.
கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்களிலும் பிரித்வி ஷா 14 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் ஷிகர் தவானுடன் பார்ட்னர்ஷிப் போட்ட ரிஷப் பன்ட் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி நேற்றைய வெற்றியுடன் சேர்த்து இதுவரை 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.