டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ டென்லி, ஷுப்மன் கில் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ஜோ டென்லியை அவுட்டாக்கி அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தார் இஷாந்த் சர்மா. அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா கில்லுடன் நிதானமாக ஆடினார். உத்தப்பா 28 ரன்னிலும், நிதிஷ் ரானா 11 ரன்னிலும் அவுட்டாகினர்.
இருப்பினும் மறுமுனையில் இருந்த ஷுப்மன் கில் அபாரமாக விளையாடி அரை சதம் கடந்தார். 65 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் கீமோ பால் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து வந்த ரஸ்ஸல் இன்றும் வழக்கம் போல சிக்ஸர்களாக விளாசினார். சிறிது நேரம் வாணவேடிக்கை காண்பித்த அவர் அரை சதம் எடுக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வெளியேற மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் ரபாடா, மோரிஸ், கீமோ பால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.