தேனியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வரும் நிலையில், அங்கு காலிக்குடங்களை ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தேனியில் பரபரப்பு நிலவுகிறது.
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து இன்று தேனியில் பிரசாரம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதோடு, ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதனால், தேனி கானாவிலக்கு அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே திடீரென காலிக்குடங்களை ஏந்தியவாறு மக்கள் கூட்டம் திரண்டது. நீண்ட காலமாக தங்கள் கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாகவும் இதனால், மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேர்வதாகவும் கூறி சண்முகசுந்தராபுர கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதனால், மதுரை − தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
இருப்பினும், கிராம மக்கள் காலிக்குடங்களை ஏந்தியவாறு சாலையின் இருபுறமும் நின்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.