கிரிக்கெட் விளையாட்டில் சிக்ஸர் அடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதற்கு தேவையான உடல் பலம் மற்றும் மன பலம் மிகவும் அவசியம்.
மேற்கிந்தியாவின் ஜமைக்காவில் பிறந்த காட்டுடம்பு கொண்டதனால், ஆண்ட்ரே ரஸல் இப்படி சிக்ஸர் மழை பொழிகிறார் என்று எண்ணுவது மிகப்பெரிய தவறு. பந்து வீச்சாளராக கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து, தனது கடின உழைப்பினால், மற்றும் பயிற்சியினாலும் தான் அதிரடி ஆட்டக்காரராக மாறிய ரஸல் ஆல் ரவுண்டராக திகழ்கிறார்.
ரஸல் வெறுமனே பேட்டை சுற்றி பந்தை சிக்ஸருக்கு அனுப்புவதில்லை. அப்படி செய்தால், அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்தும் யுக்தியை எதிரணியின் பந்து வீச்சாளர்கள் அறிந்து விடுவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான போட்டியிலும், ரஸலை கண்டு கொள்ளாமல், மற்ற வீரர்களின் கதையை முடித்த இடத்திலேயே தான் தோனி வெற்றியை வசப்படுத்தினார்.
10 சிக்ஸர்களை ஒரு போட்டியில் தொடர்ந்து அடிப்பது என்பது மிகவும் அசாதாரண விஷயம், அதற்கு முதலில் எதிரணி பந்துவீச்சாளர்களின் மன நிலையை சிதைக்க வேண்டும். அந்த விஷயத்தில் தான் கைத்தேர்ந்த பயிற்சியை ரஸல் பெற்றிருப்பதால் தான் அவரால், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸர் மழையை பொழிய வைக்க முடிகிறது.
எதிரணிக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்க முடிகிறது. மேற்கிந்திய அணி வீரர் கிறிஸ் கெய்லும் அப்படித்தான். ஆனால், அவரது பலவீனத்தை அறிந்து கொண்டு பின்னர், அவரை விரைவில் விக்கெட்டுக்க எதிரணியினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிப் பெறவே, கடந்த ஐபிஎல் போட்டியின் போது, கடைசி நேரம் வரை அவரை ஏலம் எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.
இந்த ஐபிஎல் சீசனில் ஒரு ஆட்டத்தில் மட்டும் கிறிஸ் கெய்ல் தனது பவரை காட்டினார். ஆனால், ஆண்ட்ரே ரஸல் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளிலும் தனது காட்டடி தர்பாரை காட்டி அசத்தி வருகிறார்.
ஐபிஎல் 2019-ம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 181/3 எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவரிலேயே 183/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை ரஸல் வீழ்த்தினார். மேலும், 19 பந்துகளில் அதிரடியாக 49 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உழைத்த ரஸல் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
அடுத்ததாக பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17 பந்துகளில் சிக்ஸர்களை தெறிக்க விட்டு, 48 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்த ரஸலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
3வது போட்டி டிரா ஆன நிலையில், சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
4வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 13 பந்துகளில் 48 ரன்களை குவித்து ஆட்டநாயகனாக தேர்வானார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், மறு முனையில் அணியின் அசைக்க முடியாத தூணாக இருந்து அரைசதம் கடந்த ரஸல் ரசிகர்கள் மனங்களை வென்றார்.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 21 பந்துகளில் 45 ரன்களை ரஸல் குவித்தார். ஆனாலும், நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் 97 ரன்களை விளாசி 2வது முறையாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை ஈட்டித் தந்தார்.
நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெறுகிறது.
இந்த முறை ரஸல் கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடி தருவாரா? அல்லது தல தோனி தனது சாதுர்யத்தால் மீண்டும் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுத் தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.