சர்ச்சை பேச்சு! மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

election commission send notice to maneka gandhi for telling muslims

by Subramanian, Apr 13, 2019, 13:04 PM IST

முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்கமாட்டேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மேனகா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திராகாந்தியின் மருமகளான மேனகா காந்தி நீண்ட காலமாக பா.ஜ.க.வில் இருக்கிறார். தற்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார்.

கடந்த முறை அவர் உத்தரபிரதேசத்தில் பிலிபித் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை அந்த தொகுதியில் அவரது மகன் வருண் காந்தி, பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால், மேனகா காந்தி இந்த முறை சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் துராப்கானி கிராமத்தில் நேற்று(ஏப்.12) அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெறுவதை நான் விரும்பவில்லை. அவர்கள் ஆதரவு இல்லாமல் நான் வென்றால், அவர்களுக்கு நான் எப்படி உதவ முடியும்? என்னிடம் நீங்கள் வேலை கேட்டு வந்தால் எப்படி உங்களுக்கு வேலை தருவேன். இதுவும் கொடுக்கல், வாங்கல் போன்றதுதான். முஸ்லிம்கள் எனக்கு வாக்களித்தால் மட்டுமே என்னிடம் வேலை கேட்டு வருவதில் நியாயம் இருக்கிறது. அப்போதுதான் நானும் அவர்களுக்கு வேலை கொடுப்பேன்’’ என்று கூறினார்.


முஸ்லிம்கள் வாக்களித்தால் மட்டுமே வேலை கொடுப்பேன் என்று மேனகா காந்தி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. மேலும், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இந்த நிலையில், சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூடுதல் தேர்தல் அதிகாரி பி.ஆர். திவாரி கூறுகையில், இந்த விவகாரத்தை ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. அதன்படி, சுல்தான்புர் மாவட்ட மாஜிஸ்திரேட் மேனகா காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்று தெரிவித்தார்.

You'r reading சர்ச்சை பேச்சு! மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை