ரஃபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரி விலக்கு? –வெளியானது புதிய தகவல்

anil ambani rs 1100 cr tax waiver after rafale deal

by Suganya P, Apr 13, 2019, 14:00 PM IST

ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பிறகு அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ. 1,100 கோடி அளவில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் ஆக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ல் பிரான்ஸுக்கு சென்ற போது ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியா - பிரான்ஸ் இடையில் சுமார் 8.6 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்காமல், அனில் அம்பானிக்கு வழங்கி விட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரிலைன்ஸ் குழுமம், ரஃபேலுடன் இணைந்து சொகுசு விமானங்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியது. 36 ரஃபேல் போர் விமானம் வாங்கப்பட உள்ள நிலையில், போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், அனில் அம்பானியின் ரிலைன்ஸ் நிறுவனத்துக்குப் பெரிய அளவிலான முறையற்றப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் அதற்கான ஆதாரங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அண்மையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் இரண்டு முக்கிய விதிகளை மத்திய அரசு தளர்த்தியதாகப் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில், ‘ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்' என மத்திய அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மேலும் ஒரு புதிய தகவலை பிரான்ஸ் ‘Le Monde’ நாளேடு வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியா-பிரான்ஸ் இடையிலான ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட ஆறு மாதத்துக்குள், பிரான்ஸில் பதிவு செய்யப்பட்ட அனில் அம்பானியின் "ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ்" நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு வரி விலக்கு அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் டஸால்ட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தில் அணில் அம்பானி இணைந்த பிறகு அதாவது, கடந்த 2015 பிப்ரவரி – அக்டோபர் மாதத்தின் இடையில், அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சுமார், 1,125 கோடி ரூபாய் அளவில் வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

You'r reading ரஃபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரி விலக்கு? –வெளியானது புதிய தகவல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை