தி.மு.க. தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி என்றும், அ.தி.மு.க. கூட்டணி கொள்ளை கூட்டணி என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று திருச்சி மற்றம் நாமக்கல் பகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
திருச்சி மக்களவை தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருச்சி உழவர் சந்தை பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கொள்கை கூட்டணி, எதிர் தரப்பு கூட்டணி கொள்ளை கூட்டணி.
மத்தியில் பா.ஜ. தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலத்துக்காக என்ன நன்மை செய்தனர்? இவ்வாறு அவர் பேசினார். மேலும், ஸ்டாலின் தனது பேச்சின் போது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உள்ள பல ஒற்றுமைகளை இருப்பதை சுட்டி காட்டியது குறிப்பிடத்தக்கது.