ஓட்டுக்கு துட்டு என்ற மோசமான கலாச்சாரத்தால், தமிழகம் மோசமான சாதனையை படைத்து உலக அளவில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் வாக்காளர்களா ?இல்லை அரசியல்வாதிகளா? என்பதை அலசி ஆராய்வதை விட இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன என்பதை யோசிக்க வேண்டிய தக்க தருணமும் இதுதான் என்பதை உணர வேண்டும்.
கடந்த 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி அரவாக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் . இந்திய வரலாற்றில் என்ன, உலக வரலாற்றிலேயே பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து என்பது இதுதான் முதல் தடவை என்ற மோசமான சாதனையை தமிழகம் படைத்தது. தொடர்ந்து 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் இதே காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டது. தற்போது மக்களவை வரலாற்றிலும் முதல் முறையாக தமிழகத்தின் வேலூர் தொகுதியிலும் பணப் பட்டுவாடா என்ற காரணத்தைக் கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்டு, அதிலும் சாதனை படைத்து தமிழகத்தில் அப்படி என்னதான் நடக்கிறது என்பதை இந்தியாவையே உற்று நோக்கச் செய்து விட்டது.
என்றைக்கு திருமங்கலம் பார்முலா என்று, 2009-ல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 3000 , 5000 ஆயிரம் என்று கொடுத்து வாக்காளர்களை விலை பேசினார்களோ, அன்று முதலே ஓட்டுக்கு துட்டு என்ற மோசமான கலாச்சாரம் தமிழகத்தில் மெல்ல மெல்ல தலை தூக்கி விட்டது. அதன் பின்னர் நடந்த இடைத் தேர்தல்கள் அனைத்திலும் இது போன்று பணப் பட்டுவாடா செய்தே ஆளும் கட்சிகள் வெற்றி பெற்று வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இந்த ஓட்டுக்கு துட்டு கலாச்சாரம் தற்போது பெரிய வியாதி போன்று மாறி, நடைபெற உள்ள தேர்தலில் எங்கெங்கு காணிணும் பண மழையடா? என்ற அளவுக்கு தமிழகம் முழுவதும் இதே பேச்சு தான். ஆளுங்கட்சித் தரப்பில், அதிகாரிகளின் துணையோடு பகிரங்கமாகவே பணம் விநியோகம் செய்யப்படுவதும், எதிர்க்கட்சிகள் கொடுக்க முயன்றால் பொறி வைத்து பறிமுதல் செய்வதும் என ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.
முன்னெல்லாம் தேர்தல் என்றாலே திருவிழா போன்று மக்களே தன்னெழுச்சியாக முன் வந்து ஜனநாயக கடமையாற்றினர். கட்சித் தொண்டர்களும் இரவு, பகல் பாராது தங்கள் கட்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதும் நடந்தது. இதனால் ஒவ்வொருவர் மீதும் ஏதேனும் ஒரு கட்சி அடையாளம் விழுந்து தங்கள் கட்சிக்காக வெறித்தனமாக உழைத்தனர்.
ஆனால் இவையெல்லாம் இப்போது அடியோடு காணாமல் போய் பணம் தான் பிரதானம் என்றாகி ஜனநாயமே கேலிக்கூத்தாகி விட்டது. கட்சியின் தொண்டனே பணம் கொடுத்தால் தான் கொடியையே கையில் பிடிப்பேன் என்ற அளவுக்கு போய் விட்டான். அப்புறம் வாக்காளர்களும் எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு ஆளாக்கப்பட்டு விட்டார்கள். இதனால் தேர்தலுக்கு முந்தின சில நாட்களில் தீவிர வாக்கு சேகரிப்பு என்பதெல்லாம் போய் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்வது எப்படி? எவ்வளவு கொடுக்கலாம் என்பதிலேயே அனைவரின் கவனம் சென்று ஜனநாயக தேர்தல் திருவிழா என்பது கேலிக்கூத்தாகிக் கிடக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க நன்கு யோசிக்க வேண்டிய நல்ல தருணம் இதுதான். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஜல்லிக்கட்டுக்காக போராடியது போல் இன்றைய இளைய தலைமுறையினராவது முன்வர வேண்டும்.