சேலத்தில் பெண் வாக்காளர் ஒருவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுக்கும் வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.
சேலத்தில் கடைசி நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண் வாக்காளர் ஒருவருக்கு பணம் கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி, முதல்வரே முன்னின்று ஆளும்கட்சி சார்பில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ரோகிணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண் வாக்காளர் ஒருவருக்கு பணம் கொடுத்தாக புகார் ஏதும் வரவில்லை. இருப்பினும் தாமாகவே முன்வந்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சி என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அ.தி.மு.க மறுத்துள்ளது. அப்பெண்ணிடம் வாழைப்பழம் வாங்கியதற்காகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்ததாக அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அன்புடன் வாழைப்பழம் கொடுத்த அக்காவிற்கு, அதற்கான பணத்தைக் கொடுக்கிறார் முதல்வர் அவர்கள். திமுக டீ குடித்தால் கூட பணம் கொடுக்காமல் அடித்து அராஜகம் செய்யும் நிலையில்,விவசாயிகளின் நண்பராக நடந்துகொண்டதை ஓட்டுக்குப் பணம் கொடுத்தார் எனத் திசை திருப்புவது திமுகவின் கீழ்த்தரமான தேர்தல் பயமே என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.