வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள், வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் 24 மணி நேரமும் இருக்க அனுமதிக்க வேண்டும் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க.தமிழ்ச்செல்வன் கூறுகையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதி இன்றி பெண் அதிகாரி சென்றது சந்தேக மளிக்கிறது. இபிஎஸ் தரப்பு தோல்வி பயத்தில் ஏதோ சூழ்ச்சி செய்யப் பார்க்கிறது. வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர்களின் ஏஜன்டுகளை அனுமதிக்க மறுப்பதில் சந்தேகம் எழுகிறது. எனவே 24 மணி நேரமும் ஏஜன்டுகள் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்.
தேனி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பணப்பட்டுவாடா தொடர்பான வீடியோவும், சில இடங்களில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நடைபெற்ற தகராறு தொடர்பான வீடியோவும் என்னிடம் உள்ளது என்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் வேட்பாளர்களின் ஏஜண்டுகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.