இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை ஆய்வு செய்ததில் தற்கொலைப்படை பற்றிய ஆதாரங்கள் சிக்கி உள்ளன.
(PIC-ANI)
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நேற்று காலை 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது, இந்த தாக்குதலில் இந்தியர்கள் உட்பட 290க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், போப் ஆண்டவர் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், இலங்கையில் வெளிநாட்டவரை குறிவைத்தது நட்சத்திர தங்கும் விடுதிகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கொழும்புவில் 7 இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தற்கொலைப் படையினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்களை ஆய்வு செய்ததில் தற்கொலைப்படை பற்றிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக இலங்கையில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இலங்கை தாக்குதல் குறித்துப் பேசிய அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ‘இலங்கையைச் சேர்ந்த அமைப்பு ஒன்று தற்கொலை தாக்குதல் நடந்த மிகப்பெரிய அளவில் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த 4ம் தேதி அன்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவின் இந்த எச்சரிக்கையை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த அந்தந்த பகுதி காவல் நிலையத்துக்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இருந்த போதும், அலட்சியத்தால் தாக்குதல் நடந்து விட்டது' என்று வருத்தம் தெரிவித்து உள்ளார்.