தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் யாரும் எதிர்பார்க்காத காட்சிகள் அரங்கேறின. முதலில் வழக்கம் போல் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் (2016 டிசம்பர் 5ம் தேதி) அமர்ந்தார். அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா பொறுப்பேற்றார்.
அவருக்கு முதல்வர் நாற்காலி மீது ஆசை ஏற்பட்டது. ஆனால் பன்னீர் செல்வம் பதவி விலக முதலில் மறுத்தார். ஆனால் பின்னர் தனது பதவியை (2017 பிப்ரவரி 5ம் தேதி) ராஜினாமா செய்தார். அன்றைய தினமே அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தன்னை முதல்வராக பதவியேற்க அழைக்க வேண்டும் என அப்போது தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதினார்.
சசிகலா முதல்வராக ஓ.பி.எஸ். எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதியானது. அதனால் சசிகலா ஆதரவுடன் அதிமுக சட்டப்பேரவை தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் அவரை முதல்வராக பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். அவரும் முதல்வராக பதவியேற்றார்.
அதேவேளை சசிகலாவும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர் செல்வமும் இணைந்தனர். மேலும், அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை நீக்கப்பட்டனர். இதனால் சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது. ஆனாலும், அதிமுக.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்று டிடிவி தினகரன் கூறினார்.
ஆர்,கே. நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்னும் அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பு அதிமுகவின் ஒரு பிரிவுதான் என்றும் கூறினார். மேலும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் மறுத்து வி்ட்டது. உடனே உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார் தினகரன். அந்த நீதிமன்றமும் தினகரனுக்கு பாதகமாகவே தீர்ப்பு வழங்கியது. அமமுக அணியை உண்மையான அதிமுக என ஏற்றுக்கொள்ள மறுத்தது.
இந்நிலையில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் கட்சியாக இருந்தால்தான் ஒரே சின்னம் வழங்க முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உதவியோடு பொதுவான சின்னத்தை பெற்றார்.
தாங்கள் தனிக்கட்சியாக பதிவு செய்தால் அதிமுக மீதான உரிமை கோரல் வலுவிழந்து போகும் என்பதால் தனிக்கட்சியாக பதிவு செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், தாங்கள் உண்மையான அதிமுக இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறிவிட்டதால் அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்போது தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு கூறியபடி, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் இன்று மனு தாக்கல் செய்தார்.
அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்தால் அதிமுக மீதான உரிமை போய்விடும் என கருதிய டிடிவி தினகரன் தற்போது அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து இருப்பது அவரால் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது. மேலும், உயர் நீதிமன்றமும் அவரை உண்மையான அதிமுகவாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால் அமமுகவை கட்சியாக மாற்றுவதை தவிர வேறு வாய்ப்புகள் இல்லை என தெரிகிறது. ஆக. அதிமுக.வை கைப்பற்ற நினைத்த டிடிவி தினகரனின் கனவு பகல் கனவாக மாறி விட்டதை தற்போதைய நிகழ்வு வெளிப்படுத்துகிறது.