பாஜகவுக்கு வேண்டுமானால் கூட வோட்டுப் போடுங்கள்.. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று கோவா காங்கிரஸ் வேட்பாளர் பகிரங்கமாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தான் எங்களுடன் கோவாவில் கூட்டணி வைக்க மறுத்து காங்கிரஸ் ஆடிய நாடகம் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
கோவாவில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 3 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. இதில் தெற்கு கோவா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வரான பிரான்சிஸ்கோ சர்தின்ஹா வாக்களித்த பின் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, காங்கிரசுக்கு ஓட்டளிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆம் ஆத்மிக்கு ஓட்டுப் போடாதீர்கள். பதிலாக பாஜகவுக்கு கூட ஓட்டுப் போடுங்கள் என்று பிரான்சிஸ்கோ கூறினார். மேலும் பாஜகவுக்கு போடும் ஓட்டுக்கு இருக்கும் மதிப்பில் ஒரு சதவீதம் கூட ஆம் ஆத்மிக்கு போடுவதால் பிரயோசனமாக இருக்காது என்றும் பிரான்சிஸ்கோ கூறியிருந்தார்.
இதற்கு உடனடியாக டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், இதற்குத்தான் கூட்டணிப் பேச்சு என்ற பெயரில் காங்கிரஸ் நாடகம் போட்டதா? டெல்லியில் மட்டும் கூட்டணி வேண்டும்,கோவாவில் வேண்டாம் என்று கூறியதன் அர்த்தம் இப்போது அம்பலமாகியுள்ளது என்றெல்லாம் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.