டெல்லியில் தண்டவாள பகுதியில் நின்று கொண்டு இருந்த ஒரு தம்பதி மற்றும் 3 சிறுவர்களை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்காரர் ரயில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்பிர் சிங் ரானா (வயது 50). ரயில்வே போலீஸ்காரரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி அருகே உள்ள ஆசாத்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பணியில் இருந்தார். அன்று இரவு 9.45 மணி அளவில் ரானா பணியில் இருந்த போது, ரயில்வே தண்டவாள பகுதியில் ஒரு ஜோடி விவாதம் செய்து கொண்டு இருந்ததை பார்த்தார். அப்போது அந்த தண்டவாளத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டு இருந்தது.
ரயில் வருவதை அந்த ஜோடி கவனிக்காமல் பேசி கொண்டே இருந்தனர். அந்த ஜோடி பேசிக் கொண்டிருப்பதை 3 சிறுவர்கள் பக்கத்து டிராக்கில் பார்த்து கொண்டு இருந்தனர். அவர்களை நோக்கி விலகி செல்லுமாறு ரானா சத்தமாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அது அந்த ஜோடிக்கு கேட்கவில்லை. இதனால் ரானா அந்த ஜோடியை நோக்கி வேகமாக ஓடி சென்று அவர்களை தண்டவாளத்திலிருந்து வெளியே தள்ளினார். மேலும் பக்கத்து டிராக்கில் மற்றொரு ரயில் வந்து கொண்டு இருந்தால் அங்கு நின்று கொண்டு சிறுவர்களையும் வெளியே போகுமாறு எச்சரித்தார். இதனையடுத்து சிறுவர்கள் உயிர் தப்பினர்.
உத்தர பிரதேசத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் நடுவழியில் பயணிகள் பரிதவிப்பு
அதேசமயம் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரானா அருகே வேகமாக வந்து விட்டது. ரானா சுதாரித்து வெளியே வருவதற்குள் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார். ஒரு தம்பதி மற்றும் 3 சிறுவர்களை காப்பாற்றி விட்டு ரயில்வே போலீஸ்காரர் தன் உயிரை இழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.