ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூட உத்தரவிட்டது. தமிழக அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் டெல்லி தேதிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. அதோடு, ஆலை செயல்படுவதற்கான அனுமதியைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது வேதாந்தா. இதனிடையில், தேதிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், தேதிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா ரிட் மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தியது.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வேதாந்தா. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பராமரிப்பு பணிகளை ஆய்வுசெய்யக் குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கின் விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.