தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திடீர் பயணமாக குடும்பத்துடன் காசி யாத்திரை சென்று அங்கு பரிகார பூஜைகள் செய்தது ஏன்? என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஆரம்பம் முதல் படுபிஸியாக இருந்தார். மேலும் தனது மகன் ரவீந்திரநாத், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டதால் அவருடைய வெற்றிக்காக கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டார். பிரதமர் மோடியையே தேனிக்கு பிரச்சாரத்திற்கு அழைத்து வந்தார்.
தேர்தல் முடிந்தவுடன், அடுத்து திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ் மும்முரமானார். ஒரு வழியாக நேற்று முன்தினம் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்த கையோடு அன்று பிற்பகலே தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் காசிக்கு பயணமாகி விட்டார் ஓபிஎஸ்.
காசியில் (வாரணாசி) தான் பிரதமர் மோடி மீண்டும் மக்களவைக்கு போட்டியிடுகிறார். அதனால் நாளை மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், மோடிக்காக தேர்தல் பணிகளிலும் ஓபிஎஸ் சில நாட்கள் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தெய்வ நம்பிக்கை, ஜோதிடம்,பரிகாரம் போன்றவற்றில் எப்போதும் தீவிர பற்று கொண்ட ஓபிஎஸ், காசியில் சில பரிகார பூஜைகளிலும் பங்கேற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. காவி வேஷ்டி, கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் , ஓபிஎஸ் மிகப் பணிவாக பூஜையில் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாக, தேனியில் தனது மகன் வெற்றிக்காகவும், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளால் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகவும் சிறப்பு பரிகார பூஜைகளில் ஓபிஎஸ் பங்கேற்றதாகவும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.