வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். மேலும், அந்த காற்றழுத்த பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Fani) எனப் பெயரிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ‘தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வரும் 27, 28ம் தேதிகளில் புயல் சின்னமாக மாறி தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் எனக் கூறினார். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், நாளை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் புயல் கரையைக் கடக்கும் போது பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால், அதேநேரம் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தீரும் என தமிழ்நாடு வெதர்மேன் கணித்திருக்கிறார். அதோடு, தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் அல்லது நடுக்கடலில் பலமிழந்து விடவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.
தமிழகம். புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால், கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு 'ரெட் அலர்ட்' கொடுத்தது இந்திய வானிலை மையம்.