தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து சில பகுதிகளில் பரவலாக கோடை மழை குளிர்வித்து வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், வெப்ப சலனம் காரணமாக கடந்த இரு தினங்களாக திடீரென வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களின் மேக மூட்டம் காணப்படுவதால், வெயிலின் தாக்கம் சற்றே தணிந்துள்ளது.
இந்நிலையில், வரும் 25ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு இடையே உள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது 27ம் தேதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து 29ம் தேதி புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இந்த புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 29ம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழை மற்றும் சூறைக்காற்று வீசும் எனவும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.