டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க சபாநாயகர் முடிவு?

Tamilnadu speaker may issue notices to TTV supporting mlas under anti defection law

by எஸ். எம். கணபதி, Apr 26, 2019, 14:33 PM IST

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த தமிமுன் அன்சாரி ஆகியோரின் பதவியை பறிக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மொத்த உள்ள இடங்களின் எண்ணிக்கை 234. இவற்றில் 22 தொகுதிகள் காலியாக இருந்ததால், இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இந்த 22ஐ கழித்தால் மீதி 212 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் தி.மு.க கூட்டணியில் 97 பேர், டி.டி.வி. தினகரன் மற்றும் அவருக்கு ஆதரவாக திரும்பிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் மற்றும் தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்த நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் என்று 5 பேரை சேர்த்தால் 102 பேர் போய் விடுவார்கள். கருணாஸ் இங்கும், அங்குமாகவே உள்ளார். அவரையும் கழித்தால் மீதி தற்போதைக்கு அ.தி.மு.க. பலம் என்பது 109தான்.

எனவே, இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைக்க முடியும். இந்த சூழ்நிலையில், கருணாஸ் எப்படியும் திரும்பி அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து விடுவார் என்று அக்கட்சியின் தலைமை கருதுகிறது. அவரும் தேர்தலுக்குப் பின்பு தனது முடிவை அறிவிப்பதாக கூறியிருக்கிறார். அதனால், அவரை விட்டு விட்டு ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன், தமிமுன் அன்சாரி ஆகியோரை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாமா என்று அ.தி.மு.க. மேலிடம் பரிசீலித்து வருகிறது. ஒருவேளை பதவி பறிபோய் விடும் என்ற பயத்தி்ல் அவர்கள் திரும்பி வந்தால், அவர்களை சேர்த்து கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளது.

இதன் காரணமாக, சபாநாயகர் தனபாலுடன், அரசு கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று காலையில் ஆலோசனை நடத்தினர். இதில், தமிமுன் அன்சாரி மற்றும் டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏக்களுக்கும், ‘உங்கள் மீது ஏன் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நால்வரும் அந்த நோட்டீசுக்கு சரியான பதில் தராவிட்டால், அவர்களின் பதவியையும் ஏற்கனவே 18 பேரின் பதவியை பறித்தது போல் பறிக்க முடியும். இதன் மூலம், தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்ற மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 230 ஆகி விடும். எனவே, இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் வென்றாலே ஆட்சியை தக்க வைக்க முடியும்.

இந்த நோட்டீஸ் விவகாரம் மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டின் சிறுநீரால் குணமாகவில்லை;அறுவை சிகிச்சையால் குணமானது! –சாத்வியின் புற்றுநோய் சர்ச்சை

You'r reading டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க சபாநாயகர் முடிவு? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை