ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற கேரளாவின் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யா, சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு அண்மையில் வெளியானது. இதில், அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ஸ்ரீதன்யா.இவர் வயநாடு, தொழுவண்ணா பகுதியில் உள்ள, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். போதிய வசதி இல்லாத சூழ்நிலையிலும், யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று அதில்,வெற்றி பெற்றுள்ளார். 22 வயதில் இவர் புரிந்த சாதனையானது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அண்மையில் ஸ்ரீதன்யாவை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.
இதனிடையில், தனது வெற்றி குறித்து தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு இவர் அளித்த பேட்டியில், 'நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை நேரில் சந்திக்க வேண்டும்' என்று தன் ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து, சென்னையில் இன்று கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதன்யா, ‘கமல்ஹாசனை சந்தித்தது மிகச் சிறந்த அனுபவம்; அவர் ஒரு சிறந்த மனிதர்’ என்று கூறினார்.
கமல்ஹாசன், ‘சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற ஸ்ரீதன்யா மிகப்பெரிய சாதனையாளர். இந்த சாதனைதான் அவரின் முதல் தகுதி. இனத்தில், குலத்தில் உறவுக்காரர்கள் என யாரும் செய்யாத விஷயத்தை ஸ்ரீதன்யா செய்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள்’ எனத் தெரிவித்தார்.